கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு


கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2019 3:45 AM IST (Updated: 5 Jan 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் குடிநீர் திட்ட பணிகளையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட மேகலசின்னப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, மல்லிநாயனப்பள்ளி ஊராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேகலசின்னப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், நோயாளிகள் வருகை பதிவேடு, சிகிச்சை அளிக்கும் பிரிவு, சித்தா பிரிவு, மருந்துகள் வழங்கும் பிரிவு மற்றும் ஆய்வக பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நோயின் தன்மை குறித்து கேட்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

தற்போது குளிர்காலமாக உள்ளதால் சளி, காய்ச்சல் நோய் தொற்று உள்ளவர்கள் அதிகமாக மருத்துவமனைகளுக்கு வருவதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதோடு மருந்து மாத்திரைகளை தேவையான அளவுக்கு வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இதே போல மருத்துவமனையில் குடிநீர் மற்றும் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதாரமாக வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து மேகலசின்னப்பள்ளி அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி, கட்டிகானப்பள்ளியில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளையும், மல்லிநாயனப்பள்ளியில் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளையும் குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய கலெக்டர் பிரபாகர் பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்று நோய் மற்றும் பல்வேறு நோய் ஏற்பட காரணமாகிறது என்றார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரசன்னவெங்கடேசன், பாலாஜி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story