கறம்பக்குடி பகுதியில் வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கியதில் குளறுபடி குவியும் புகார்களால் அதிகாரிகள் திணறல்


கறம்பக்குடி பகுதியில் வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கியதில் குளறுபடி குவியும் புகார்களால் அதிகாரிகள் திணறல்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி பகுதியில் வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நிவாரணம் கேட்டு குவியும் புகார்களால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

கறம்பக்குடி,

கஜா புயலின் தாக்குதலால் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதி சின்னாபின்னமாகியது. தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதி என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக பாதிப்பிற்குள்ளான பகுதி கறம்பக்குடி. வீடு, விவசாயம், தொழில், வியாபாரம், கூலி வேலை என வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த மக்கள் தற்போது தான் புயல் பாதிப்பில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கியதில் கறம்பக்குடி தாலுகா பகுதியில் கடும் குளறுபடி ஏற்பட்டு உள்ளது. வீடுகளை இழந்த பலருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. அதே வேளையில் வசதி படைத்த பலருக்கு 2 மற்றும் 3 முறை வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. இழப்பீடு தொகை கிடைக்காத பொதுமக்கள் வங்கிகளுக்கும், தாலுகா அலுவலகத்திற்கும் அலைந்து திரிகின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கானோர் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து இழப்பீடு மற்றும் நிவாரண பொருட்கள் கிடைக்காதது குறித்து புகார் மனு கொடுத்து வருகின்றனர். இதனால் தாலுகா அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் திணறி வருகின்றனர். பொதுமக்களின் கோபத்தாலும், பிரச்சினைக்கு தீர்வு காணாமலும் 40 நாட்களுக்கும் மேலாக கறம்பக்குடி பகுதியில் உள்ள மண்டபங்களில் நிவாரண பொருட்கள் முடங்கி கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

இது குறித்து தாலுகா அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் கூறுகையில், புயலால் எனது ஓட்டு வீடு முழுமையாக சேதமடைந்தது. நேரில் பார்வையிட்ட அதிகாரிகள் ஆறுதல் கூறி இழப்பீடு தொகை கிடைக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் எங்கள் ஊரில் வசதி படைத்தவர்களுக்கு கிடைத்த தொகை எனக்கு கிடைக்கவில்லை. எல்லா வகையிலும் ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். மனுவை வாங்கவும் அதிகாரிகள் மறுக்கின்றனர், என்று கூறினார்.

Next Story