பாலித்தீன் பைகளுக்கு தடை எதிரொலி, வாழை இலை-பாக்கு தட்டு விலை இரண்டு மடங்கு உயர்வு
பாலித்தீன் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால், வாழை இலை-பாக்கு தட்டின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் பாலித்தீன் பை உள்பட 14 வகையான பொருட்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் கடந்த 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கும் தன்மையற்ற பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் சுகாதாரக்கேடு அதிகரித்து வருவதால் அவற்றுக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்தது. அந்த பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, பாக்கு தட்டு போன்ற மக்கும் தன்மையுடைய பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பொருட் கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த தடை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து 100 டன் பிளாஸ்டிக் பொருட் களை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, பாக்கு தட்டு உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன்காரணமாக அவற்றின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஓட்டல், கறிக்கடைகளில் பார்சல் போடுவதற்கு பாலித்தீன் பைகளுக்கு பதிலாக வாழை இலை மற்றும் பாக்கு தட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.400-க்கு விற்ற ஒரு கட்டு வாழை இலை நேற்று முன்தினம் ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ரூ.2-க்கு விற்பனையான ஒரு இலை தற்போது ரூ.4 ஆக உயர்ந்துள்ளது.
ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் சிறிய வாழை இலை (டிபன் இலை) ரூ.1-ல் இருந்து ரூ.2 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, ரூ.2-க்கு விற்பனையான பாக்கு தட்டு நேற்று முன்தினம் ரூ.5 ஆக உயர்ந்துள்ளது. 50 காசுக்கு விற்கப்பட்ட சிறிய பாக்கு தட்டு ரூ.1 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், வாழை இலை, பாக்கு தட்டுகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இதேபோல, டீக்கடைகளில் பார்சலுக்கு பதிலாக தூக்குவாளிகள், சில்வர் பாத்திரங்களை பொதுமக்கள் எடுத்து வந்து வாங்கி செல்கின்றனர். இது மிகப்பெரிய மாற்றமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story