பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பு கலெக்டர் கணேஷ் பேச்சு


பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பு கலெக்டர் கணேஷ் பேச்சு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:15 AM IST (Updated: 5 Jan 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் ஒழிப்பு நட வடிக்கைக்கு பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று கலெக்டர் கணேஷ் பேசினார்.

புதுக்கோட்டை,

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து தடுக்கும் வகையில் நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், காவல்துறை, வருவாய்த்துறையினர் உள்ளிட்ட 192 அலுவலர்களை கொண்ட 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினருக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாள்கள், விரிப்புகள், பிளாஸ்டிக் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள் போன்ற பொருட்கள் இருந்தால் அவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்யவும், பறிமுதல் செய்யப்படும் பொருட்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பதுடன், இது குறித்த தகவலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக முழு செயல்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story