எலச்சிபாளையம் அருகே சுடுகாட்டில் பஸ்சை நிறுத்துவதால் மாணவர்கள் அச்சம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எலச்சிபாளையம் அருகே, சுடுகாட்டில் அரசு பஸ்சை நிறுத்துவதால் மாணவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் மோளிப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் இருந்து வெளியூர் சென்று வருபவர்களின் வசதிக்காக திருச்செங்கோட்டில் இருந்து மோளிப்பள்ளி வழியாக கரிச்சிபாளையத்துக்கு 12-ம் எண் அரசு பஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்த பின்பு மீண்டும் அந்த பஸ் இயக்கப்பட்டது. இந்த நிலையில் பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்களை மோளிப்பள்ளி அருந்ததியர் தெருவில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் இடத்தில் நிறுத்தி இறக்கி விடாமல் சுடுகாடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மாலை நேரத்தில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதோடு, சுடுகாடு என்பதால் அச்சப்பட்டு வீடு திரும்புகின்றனர்.
இந்த பஸ் தினசரி அனைத்து பஸ்களும் நின்று செல்லும் இடத்தில் நின்று செல்ல வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர், சேலம் கோட்ட மேலாளர் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலகங்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வாலிபர் சங்கத்தினரும் திருச்செங்கோடு அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று இந்த பஸ் சம்பந்தமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டதற்கு, சங்ககிரி பணிமனைக்கு சென்று விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த பஸ்சை அனைத்து பஸ்களும் நின்று செல்லும் இடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், திருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு பணிமனை முன்பு வருகிற 14-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story