திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை


திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 66 வயதான சூலிகாம்பாள் என்ற யானை ஒன்று உள்ளது. இந்த யானை ஒவ்வொரு ஆண்டும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு சென்று வந்தது. ஆனால் இந்த யானைக்கு வயதான காரணத்தால் கடந்த ஆண்டு(2017) முதல் நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை. 2-வது ஆண்டாக சூலிகாம்பாள் யானை நலவாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை.

இந்நிலையில் சூலிகாம்பாள் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டும் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நீலகிரி மற்றும் கோவை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மனோகரன் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். பின்னர் யானை பராமரிப்பது குறித்து பாகன் ஹரியிடம் கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூலிகாம்பாள் யானை 66 வயதானாலும் நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த யானைக்கு பல், கால்நகங்கள், தோல், கண்பார்வை, ஜீரணசக்தி ஆகியவை நன்றாக உள்ளது. கோவில் நிர்வாகத்தினர் யானையை நல்லமுறையில் பராமரித்து வருகின்றனர் என்றார்.

பரிசோதனையின் போது கோவில் இளைய சன்னிதானம், திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசன், அம்பல் உதவி மருத்துவர் அமர்நாத், கோவில் எழுத்தர் செல்வம், ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story