தட்டு ரிக்‌ஷாவில் வந்த சுயேச்சை வேட்பாளர் கிழிந்த பனியனுடன் வந்த விவசாயி டெபாசிட் தொகைக்காக காலி மது பாட்டில்கள் சேகரிப்பு திருவாரூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் கலக்கல்


தட்டு ரிக்‌ஷாவில் வந்த சுயேச்சை வேட்பாளர் கிழிந்த பனியனுடன் வந்த விவசாயி டெபாசிட் தொகைக்காக காலி மது பாட்டில்கள் சேகரிப்பு திருவாரூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் கலக்கல்
x
தினத்தந்தி 5 Jan 2019 5:00 AM IST (Updated: 5 Jan 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தட்டு ரிக்‌ஷாவில் வந்தார் சுயேச்சை வேட்பாளர். டெபாசிட் தொகைக்காக வீதிகளில் கிடந்த காலி மது பாட்டில்களை மற்றொருவர் சேகரித்தார். மேலும் கிழிந்த பனியன் அணிந்தபடி விண்ணப்பம் வாங்குவதற்காக விவசாயி வந்தார். திருவாரூர் தொகுதியில் சுயேச்சைகளின் இந்த கலக்கல் நடவடிக்கையால் தேர்தல் களம் உற்சாகம் அடைந்து உள்ளது.

திருவாரூர், 

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாசிடம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் தட்டு ரிக்‌ஷாவில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நூர்முகமது ஏற்கனவே 25 முறை தேர்தல்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது 26-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் விவசாயி ஜெயராமன் ஆகியோர் விண்ணப்பம் வாங்க வந்தனர்.

அவர்கள் இருவரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருவாரூரில் டாஸ்மாக்கடை, பஸ் நிலையம், சாலை ஓரம் உள்ளிட்ட பகுதிகளில் கிடந்த காலி மது பாட்டில்களை தாங்கள் வைத்திருந்த சாக்குப்பையில் ஆறுமுகம், தன்னுடன் வந்தவருடன் சேகரித்தார்.


அந்த காட்சியை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து ஆறுமுகம் கூறுகையில், தமிழகத்தில் அதிக அளவில் மது குடிப்போர் இருப்பதாகவும், மது குடிப்போரின் நலனுக்காக எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் குரல் எழுப்பவில்லை என்றும், எனவே மது குடிப்போரின் நலனுக்காக திருவாரூர் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகைக்காக, டாஸ்மாக் கடை வீதிகளில் கிடக்கும் மது பாட்டில்களை தான் சேகரித்து அதில் இருந்து கிடைக்கும் தொகையை கொண்டு டெபாசிட் கட்டி மனு தாக்கல் செய்யப் போகிறேன்” என்றார்.

இதேபோல் விவசாயி ஜெயராமன், கிழிந்த பனியனுடன், கழுத்தில் டை கட்டியபடி விண்ணப்பம் வாங்க வந்து இருந்தார். அவரிடம் கிழிந்த பனியனுடன் மனு வாங்க வந்தது ஏன்? என்று கேட்டதற்கு, தமிழகத்தின் நிலையும், தமிழக விவசாயிகளின் நிலையும் சிதைந்து இருப்பதாகவும், அதனாலேயே தான் கிழிந்த பனியனுடன் மனு வாங்க வந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, தனக்கு டி.டி.வி. தினகரன் கட்சி வேட்பாளரே போட்டி என்றும், அவரை எதிர்க்கும் முழு தகுதியும் தனக்கே உள்ளது” என்றும் கூறினார்.

திருவாரூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களின் இந்த கலக்கல் நடவடிக்கையால் திருவாரூர் தேர்தல் களம் உற்சாகம் அடைந்து உள்ளது.

Next Story