தூத்துக்குடி அருகே ருசிகரம் மண்பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடிய வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து அசத்தல்


தூத்துக்குடி அருகே ருசிகரம் மண்பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடிய வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து அசத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-05T02:15:41+05:30)

தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து மண்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து மண்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

வெளிநாட்டினர் வருகை

இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு வருவது வழக்கம். அவர்கள் தனியார் அமைப்பு மூலம் ஆட்டோக்களில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பழகி, இந்திய பண்பாடு, கலாசாரம் குறித்து அறிந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 23 பெண்கள் உள்பட 80 பேர் சென்னை வந்தனர். அங்கிருந்து கடந்த 28-ந் தேதி ஆட்டோக்களில் பயணத்தை தொடங்கினர்.

பொங்கலிட்டு வழிபாடு

அவர்கள் அங்கிருந்து 32 ஆட்டோக்கள் மூலம் புதுச்சேரிக்கு சென்றனர். தொடர்ந்து தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். விதவிதமான வண்ணங்களில் ஆட்டோக்களை அலங்கரித்து இருந்தனர். அவர்கள் அலங்கார ஆடைகள் அணிந்தும் வலம் வந்தனர். தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம், மணப்பாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

நேற்று மாலையில் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்துக்கு சென்றனர். அங்குள்ள ஒரு தோட்டத்தில் அவர்கள் பொங்கல் விழா கொண்டாடிய ருசிகர சம்பவம் நடந்தது. மொத்தம் 32 மண்பானைகள் வைத்து பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து அசத்தினர். ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலையும் அணிந்து இருந்தனர். அந்த தோட்டத்தில் கரும்பு, வாழையால் தோரணங்கள் அமைத்து இருந்தனர். மேலும் மஞ்சள் குலை, பழம், பனங்கிழங்கு படைத்து பொங்கலிட்டு வழிபட்டனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து வெளிநாட்டினர் கூறுகையில், ‘தமிழ்நாட்டு மக்கள் எங்களை உற்சாகமாக வரவேற்றனர். இங்குள்ள கலாசாரம் மிகவும் பிடித்து உள்ளது. நாங்கள் தமிழகத்தின் பாரம்பரிய உடையை அணிந்து உள்ளோம். இதனை அணிவதில் சிரமம் இருந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மண்பானையில் பொங்கலிடுவது வித்தியாசமாக உள்ளது‘ என்றனர்.

வெளிநாட்டினர் நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு செல்கின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவனந்தபுரத்துக்கு சென்று பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

Next Story