எம்.ஜி.ஆர். பிறந்த நாளான 17-ந் தேதி முதல் திருவாரூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன் தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேட்டி
எம்.ஜி.ஆர். பிறந்தநாளான 17-ந் தேதி முதல் திருவாரூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன் என தஞ்சையில், டி.டி.வி.தினகரன் கூறினார்.
தஞ்சாவூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் அத்தொகுதி மக்கள் அம்மாவின் உண்மையான தொண்டனான என்னை வெற்றி பெற செய்தார்கள். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்கு அச்சாரமாக எஸ்.காமராஜூக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 8, 9 கட்சிகளின் கூட்டணி கூட தோற்றுப்போனது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.
வரலாறு காணாத அளவுக்கு அ.தி.மு.க. வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக சொல்கிறீர்கள். அவர்களால்(அ.தி.மு.க.வினர்) போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் பிரசாரம் செய்ய வர முடியாது. திருவாரூர் தொகுதி ஒரு காலத்தில் தி.மு.க.வின் தொகுதியாக இருந்தது. இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொகுதியாக மாறி விட்டது.
எங்கள் வேட்பாளர் வருகிற 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். நான் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான 17-ந் தேதி மாலையில் பிரசாரத்தை தொடங்கி 26-ந் தேதி மாலை வரையில் பிரசாரம் செய்கிறேன். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி விடுவார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் 51 ஆயிரம் வாக்குகள் பெற்றார். ஆனால் இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் 29 ஆயிரம் வாக்குகளே பெற்றார். ஒவ்வொரு காலகட்டமும் வேறு. ஜெயலலிதா, கருணாநிதி இல்லை. இப்போது எல்லா கட்சியும் புதிய கட்சி தான். அதன் வெளிப்பாடு தான் தமிழகத்தின் சரித்திரத்தில் இல்லாத வகையில் சுயேச்சை வேட்பாளரான என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். கோட்டை விட்டதால் தான் நீதிமன்றத்தின் படிகளில் காத்து இருக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு ஒரு சில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் யாரிடமும் பேசவில்லை. யாராவது ஆதரவு தந்தால் ஏற்று கொள்வோம். இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆர்.கே.நகரில் வீடு, வீடாக சென்று அ.தி.மு.க.வினர் ரூ.6 ஆயிரம் கொடுத்தபோது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளி காசுக்கு எல்லாம் மக்கள் சக்தி அடிமைப்படாது.
பொங்கல் பரிசை மக்கள் வரிப்பணத்தில்தான் அறிவித்து இருக்கிறார்கள். அவர்களது பணமா?. மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வர மக்கள் காத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆளும் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு தொடக்கமாக இடைத்தேர்தல் வெற்றி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். ஜெயலலிதா வழியில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினால்தான் கொண்டு வர முடியும்.
மக்களுக்கு நிவாரணம் சென்று சேர வேண்டும். வீடுகளை இழந்து, மாற்றுத்துணி இல்லாமல் 30 ஆண்டுகால வாழ்க்கைத்தரத்தை இழந்து உள்ளனர். இதுவரை தமிழக அரசு தூங்கிக்கொண்டு இருந்தது. தேர்தல் அறிவித்ததால் விழித்துக்கொண்டு நிவாரணம் வழங்குகிறார்கள். நிவாரணம், மக்களுக்கு சேர்ந்தால் நல்லதுதான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களிடம்தான் உள்ளனர். இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு மீதமுள்ளவர்களும் எங்களுடன் வந்து விடுவார்கள். தேர்தல் என்பது எங்கள் தொண்டர்களுக்கு பொங்கல் சாப்பிடுவது போன்று.அ.தி.மு.க. சின்னம், கட்சியை மீட்டெடுப்போம். ஆர்.கே.நகரில் கொடுத்த நெருக்கடியைப்போல் திருவாரூர் தொகுதியிலும் கொடுப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்திய அரசு ஆழம் பார்க்கிறதா? என தெரியாது. நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story