கஜா புயலுக்கு பிறகு 50 நாட்களாக முடங்கிய மீனவர்களின் வாழ்க்கை உடைந்த படகுகளை கிரேன் மூலம் அகற்றும் பணி தீவிரம்
கஜா புயலுக்கு பிறகு தஞ்சை மாவட்டத்தில் 50 நாட்களாக மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளது. மேலும் உடைந்த படகுகளை கிரேன் மூலம் அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், ஒரத்தநாடு பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த பல்வேறு பணிகளை செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட மீனவ கிராமங்களில் ஏராளமான விசைப்படகுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. இதில் முழுமையாக சேதமடைந்த 188 படகுகள் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளை சேர்ந்தவையாகும். முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு அரசு ரூ.5 லட்சமும், பாதி அளவு சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் அரசு வழங்கி உள்ளது. ஆனால் நிவாரணத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என படகுகளில் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:-
படகை இழந்த மீனவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணம் போதுமானதாக இல்லை. சாதாரண பைபர் கிளாஸ் படகை வாங்க ரூ.7.50 லட்சம் தேவைப்படும். புதிய விசைப்படகு வாங்க ரூ.30 முதல் 40 லட்சம் வரை செலவாகும். ஆனால் அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் போதுமானதாக இல்லை. இந்த பணத்தை அரசு மீன்வளத்துறை அதிகாரி மற்றும் படகு உரிமையாளர் கூட்டு வங்கி கணக்கில் செலுத்துவதாக அறிவித்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத மீனவர்கள் இன்னும் வங்கி கணக்கு எண்ணை அரசிடம் வழங்கவில்லை. இதனால் நிவாரண உதவி இன்றி மீனவர்களின் வாழ்க்கை 50 நாட்களாக முடங்கி உள்ளது. தற்போது உடைந்து கடலில் கிடக்கும் விசைப்படகுகளை கிரேன் மூலம் கரைக்கு கொண்டு வந்து உடைத்து வாகனங்களில் ஏற்றி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே தனி வங்கி கணக்கில் நிவாரண தொகையை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story