சிலைகளை பதுக்கிய வழக்கு: தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு ஜாமீன் கும்பகோணம் கோர்ட்டு உத்தரவு
சிலைகளை பதுக்கிய வழக்கில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு ஜாமீன் வழங்கி கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம்,
சென்னை சைதாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரன்வீர்ஷா (வயது 56). தொழிலதிபரான இவரது வீட்டில் பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புராதன சின்னங்கள், தூண்கள், கலை பொருட்கள், உலோகம் மற்றும் கற்சிலைகள் ஆகியவற்றை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ரன்வீர்ஷாவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் ரன்வீர்ஷா விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு ரன்வீர்ஷா மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும். மேலும் வழக்கு நடைபெறும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி நிபந்தனை ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் ரன்வீர்ஷா நேற்று ஆஜாரானார்.
அப்போது ரன்வீர்ஷா நிறுவனத்தின் மேலாளர்கள் 2 பேர் ஜாமீன்தாரராக ரன்வீர்ஷா தரப்பில் ஆஜராயினர். மேலும் ரூ. 1 லட்சம் பிணையத்தொகைக்கான பத்திரத்தையும் ரன்வீர்ஷா வழங்கினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அய்யப்பன்பிள்ளை, தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story