விபத்துகளை தடுக்க வெண்ணாற்றங்கரை சாலை வளைவுகளில் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
விபத்துகளை தடுக்க வெண்ணாற்றங்கரை சாலை வளைவுகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் என வாகன ஓட்டிகளும், அந்தப்பகுதி மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை- திருவையாறு சாலை வெண்ணாற்றங்கரை பகுதியில் தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட தலம் ஆகும்.
இந்தகோவில் எதிரில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வீரநரசிம்ம பெருமாள் கோவிலும் உள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது திவ்ய தேசம் என இக்கோவில் சிறப்பு பெற்றது. இதனால் இந்த 2 கோவில்களுக்கும் மற்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பிற வாகனங்களில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இதனால் அந்தப்பகுதியில் விடுமுறை நாட்களிலும், விஷேச நாட்களிலும் பக்தர்களின் வருகையால் போக்குவரத்து மிகுதியாக காணப்படும். மேலும் தஞ்சையில் இருந்து வெண்ணாற்றங்கரை வழியாக திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கோவிலூர், அய்யம்பேட்டை, பாபநாசம் மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்றுவருகின்றன.
இந்த சாலை மிகவும் குறுகலான சாலை என்பதால் வீரநரசிம்ம பெருமாள் கோவிலுக்கும் அங்குள்ள குந்தாளம்மன் கோவிலுக்கும் இடையே ஒருவழிசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு வெண்ணாற்றங்கரை துணை அஞ்சலகத்தில் இருந்து குந்தாளம்மன் கோவிலையொட்டி இடதுபுறத்தில் ஒருவழிசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வீரநரசிம்மபெருமாள் -குந்தாளம்மன்கோவில் இடையே திரும்பும் பகுதியிலும், வெண்ணாற்றங்கரை துணை அஞ்சலகம் எதிரே உள்ள சந்திப்பிலும் ஆபத்தான சாலை வளைவுகள் உள்ளன.
இந்தநிலையில் தஞ்சையில் இருந்து திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளை நோக்கி செல்லும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் வீரநரசிம்மபெருமாள் -குந்தாளம்மன்கோவில் இடையே திரும்பும் சாலையில் செல்லாமல் வழிதவறி நேராக ஒரு வழிச்சாலையில் சென்றுவிடுகிறது. இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
குறிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் இந்த ஆபத்தான சாலைவளைவில் தினமும் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த வளைவுப்பகுதியில் அடிக்கடி பஸ்கள், கனரக வாகனங்கள் செல்வதால் சாலையின் ஒருபக்கம் சாய்வாக உள்ளது.
இதேபோல கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் இருந்து வேகமாக வரும் சில வாகனங்கள் குந்தாளம்மன்கோவிலின் இடதுபுறமாக அமைந்துள்ள சாலையில் செல்லாமல், வளையில் வெண்ணாற்றங்கரை துணை அஞ்சலகம் எதிரே ஒருவழிச்சாலையில் திரும்பிவிடுகிறது. இதனால் இந்தப்பகுதியிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
ஆபத்தான சாலை வளைவுகளில் சிறியஅளவிலான அம்புக்குறி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் தெளிவாக தெரிவதில்லை. சில நேரங்களில் முன்னால் வாகனங்கள் செல்லும் போது இந்த அம்புக்குறி சின்னங்கள் தெரியாததால் எதிரே வழிதவறி ஒருவழிச்சாலையில் வாகனங்கள் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.
எனவே விபத்துகளை தடுக்க வீரநரசிம்ம பெருமாள் கோவில், குந்தாளம்மன் கோவில் மற்றும் துணை அஞ்சலகம் எதிரே வேகத்தடை அமைக்கவேண்டும். ‘ஆபத்தான சாலைவளைவு உள்ளது இடது பக்கம் திரும்பவும்’ என தமிழில் பெரிய எழுத்துகளால் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவேண்டும்.
மேலும், இந்தப்பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படுவதால் விட்டுவிட்டு ஒளிரும் அம்புக்குறி விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள், அந்தப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
Related Tags :
Next Story