ஈரோடு மாவட்ட சந்தைகளுக்கு மற்ற மாநில மாடுகளை விற்க கொண்டு வரக்கூடாது; கலெக்டர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்ட கால்நடை சந்தைகளுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து விற்பனை செய்ய மாடுகளை கொண்டு வரக்கூடாது என்று கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று ஏற்பட்டு இருந்ததால் சந்தைகள் நடத்த இன்று (சனிக்கிழமை) வரை அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நோய் தாக்கம் குறைந்து, கோமாரி நோய் பரவுதல் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஈரோடு மாவட்ட கால்நடை சந்தைகள் செயல்படுவது தொடர்பான தடை நீக்கப்படுகிறது. எனவே தற்போது செயல்பட உள்ள கால்நடை சந்தைகளில் கீழ்கண்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அதன்படி கால்நடை சந்தையின் நுழைவுவாயில் மற்றும் வெளியில் செல்லும் வாயில்களில் கிருமி நாசினிகள் கலந்த நீரில் கால் குளியல் முறை அமைக்கப்பட வேண்டும். கால்நடைகள் கூடும் சந்தை இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளிக்க வேண்டும்.
மேலும் சந்தை கூடும் நாளுக்கு முந்தைய தினம் சந்தை வளாகத்தை 4 சதவீதம் சோடியம் கார்பனேட் அல்லது 4 சதவீதம் சோடியம் ஹைட்ராக்ஸைடு கொண்டு நன்றாக தெளிக்கவேண்டும். 10 சதவீதம் சோடியம் கார்பனேட் அல்லது 4 சதவீதம் சோடியம் ஹைட்ராக்ஸைடு கிருமி நாசினி கொண்டு கால்நடைகளை ஏற்றிவரும் வாகனங்களின் சக்கரங்கள் மற்றும் அடிப்பகுதியில் நன்றாக படும்படி தெளிக்கவேண்டும்.
கால்நடைகளின் கழிவுகள், சாணம், தீவன கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சந்தையின் ஓரத்தில் ஆழமான குழியில் சுண்ணாம்புத்தூள் தெளித்து முறையாக மூடப்படவேண்டும். மேற்கண்ட செயல்கள் அனைத்தையும் உள்ளாட்சி நிர்வாகம், கால்நடை சந்தைகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் எவ்விதமான தொய்வும் இன்றி செய்ய வேண்டும்.
பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கால்நடைகளை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருவதை கால்நடை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். அதேபோல் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து கால்நடைகள் கொண்டு வருவது கண்டறியப்பட்டால் சந்தைகள் செயல்படுவது மீண்டும் நிறுத்தி வைக்கப்படும்.
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளின் உடல் நலன் மற்றும் தகுதியை உறுதிப்படுத்துவதோடு சிகிச்சை பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளில் நோய் தொற்று மிகுதியாக உள்ளவை சந்தைகளுக்கு அதிக அளவில் வருவதாக அறியப்பட்டால் சந்தைகளை மீண்டும் நிறுத்தி வைக்கும் பொருட்டு அந்த தகவலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு உடனடியாக உள்ளாட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.