தேர்வில் தோல்வி பயம் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேர்வில் ஏற்பட்ட தோல்வி பயத்தால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு சம்பத்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். டிரைவர். இவருடைய மகன் கவின் (வயது 22). இவர் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
2 பாடத்தில் தோல்வி அடைந்த அவர் அந்த பாடத்தை மீண்டும் எழுதி உள்ளார். தாழ்வு மனப்பான்மை கொண்ட கவின் யாரிடமும் அதிகம் பேசமாட்டார் என தெரிகிறது. கவின் எழுதி உள்ள 2 பாடத்திற்கான தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாக இருந்தது.
இதனால் அவர் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் இருந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு கொண்டார்.
உயிருக்கு பேராடிய நிலையில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கவின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.