கூடலூரில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மாணவ- மாணவிகள் அவதி


கூடலூரில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மாணவ- மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 9:12 PM GMT)

கூடலூரில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதி மக்களுக்கு சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கூடலூர் பகுதியில் பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. இந்த சமயத்தில் பல இடங்களில் மரங்கள் மற்றும் அதன் கிளைகள் முறிந்து விழுவதால் மின்கம்பிகள் அறுந்து அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்படுகிறது.

இதனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாது, பல்வேறு சிரமங்களுக்கு இடையே மின் ஊழியர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது மழைக்காலம் முடிந்து பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் கடுங்குளிர் நிலவுகிறது.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10 முறைக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் நேற்றும் மின்வெட்டு தொடர்ந்தது. குறிப்பாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாணவர்களும் படிக்க முடியவில்லை. ஒரு முறை மின்சாரம் துண்டித்த அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் துண்டிக்கப்படுகிறது. குறைந்த மின் அழுத்த பிரச்சினையால் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களும் பழுதடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story