ஓட்டல்களில் துணி, காகிதப்பை பயன்பாடு அதிகரிப்பு - பாத்திரங்கள் கொண்டு வர வேண்டுகோள்


ஓட்டல்களில் துணி, காகிதப்பை பயன்பாடு அதிகரிப்பு - பாத்திரங்கள் கொண்டு வர வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:15 AM IST (Updated: 5 Jan 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதின் எதிரொலியாக ஓட்டல்களில் துணி, காகிதப்பை பயன்பாடு அதிகரித்து உள்ளது. மேலும் பாத்திரங்கள் கொண்டு வர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:- அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள் (நெகிழி), ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், முள்கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மாகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்களை சுற்ற பயன்படும் பிளாஸ்டிக்குகள், லேமினேஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லேமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மேற்கண்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வாழை இலை பயன்பாடு

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக பசுமைப்படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை எதிரொலி காரணமாக, ஊட்டியில் உள்ள ஓட்டல்களில் உணவு வாங்க வருகிறவர்கள் பாத்திரங்களை கையில் எடுத்து வர வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் உணவு வழங்கப்பட மாட்டாது என்று வேண்டுகோள் விடுத்து நோட்டீசு ஒட்டப்பட்டது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அவர்கள் பாத்திரங்களை எடுத்து வருவது சாத்தியமில்லை. இதனை கருத்தில் கொண்டும், பிளாஸ்டிக் தடை எதிரொலியாலும் ஊட்டி நகரில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக வாழை இலைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் போன்றவற்றுக்கு பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். லேமினேஷன் செய்யப்படாத காகிதப்பைகளில் அப்பளம், வாழை இலையில் சாப்பாடு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பார்சல் கட்டணத்தோடு ரூ.125-ம், அங்கேயே சாப்பிட்டால் ரூ.95-ம் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி சென்ற பிளாஸ்டிக் டப்பாக்களை மீண்டும் கொண்டு வந்தால், அதில் பார்சல் செய்து ரூ.110-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துவதோடு, மறுசுழற்சியும் செய்ய முடியும். அங்கு வரும் பொதுமக்களுக்கு துணிப்பைகளில் பார்சல் வழங்கப்படுகிறது.

அதேபோல் மற்ற ஓட்டல் உரிமையாளர்களும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு துணிப்பைகளில் உணவு பார்சல்களை வழங்கி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதால், அந்த துணிப்பைகளை காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவை வாங்க பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறும்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் ஓட்டல்களில் துணி, காகிதப்பை பயன்பாடு அதிகரித்து உள்ளது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர். 

Next Story