பிரதமர் மோடி, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு


பிரதமர் மோடி, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு, 

பிரதமர் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தின் நிறைவு பகுதியில் உள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அவர் எந்த பணியும் செய்யவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிைறவேற்றவில்லை.

கருப்பு பணம் மீட்பு, முதலீடுகளை ஈர்ப்பது, கங்கை நதியை தூய்மைபடுத்துவதாக உறுதி அளித்தது, வேலை வாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது என எந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை.

விவசாய கடன் தள்ளுபடி

பிரதமர் மோடி பொய் பேசுகிறார். மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை. பொய் பேசி, மக்களை எத்தனை நாட்கள் ஏமாற்ற முடியும்?. தான் என்ன பேசினாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று மோடி கருதுகிறார். கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது கூட்டணி அரசு, ரூ.40 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 44 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். இதுவரை 60 ஆயிரம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்குரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

கிண்டல் செய்யும் மோடி

இந்த உண்மை நிலையை மறைத்து, விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் மோடி, நகைச்சுவையும், கிண்டலும் செய்துள்ளார். இதை நாங்கள் கண்டிக்கிறோம். விவசாயிகளின் கடன் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் கடன் தள்ளுபடி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் தவறு நடக்கக்கூடாது, உண்மையான விவசாயிகளுக்கு அதன் பயன் கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். அதன் அடிப்படையில் மாநில அரசு பணியாற்றி வருகிறது.

தள்ளுபடிக்கான சான்றிதழ்

இன்னும் ஒரு வாரத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்படும். கடன் தள்ளுபடி திட்டத்திற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, தற்போதைய முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை பிரதமர் ஏற்கவில்லை.

கச்சா எண்ணெய் விலை குறைவு மூலம் மத்திய அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. தனியார் நிறுவன அதிபர்களின் கடன் ரூ.3 லட்சம் கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசம்

பிரதமர் செய்யாத பணியை காங்கிரஸ் செய்து வருகிறது. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தப்படி மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story