ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்தார் ரெயிலில் அடிபட்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு


ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்தார் ரெயிலில் அடிபட்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-05T02:52:14+05:30)

ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர், ரெயிலில் அடிபட்டு பலியானார்.

பெங்களூரு, 

ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர், ரெயிலில் அடிபட்டு பலியானார். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்ல இருந்தவருக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

குழந்தையை பார்க்க வந்தார்

ஆந்திர மாநிலம் கோட்டகோடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட சுப்புராவ். இவரது மகன் கிரண்குமார் (வயது 38). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெங்களூருவில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் முதலில் வேலை செய்தார். ராமமூர்த்திநகர் அருகே தனது மனைவியுடன் கிரண்குமார் வசித்து வந்தார். இதற்கிடையில், பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அதே கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி செய்வதற்காக கிரண்குமார் சென்று விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிரண்குமாரின் மனைவிக்கு, அவரது சொந்த ஊரான கோட்டகோடுவில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தனது குழந்தையை பார்க்க சுவிட்சர்லாந்தில் இருந்து ஆந்திராவுக்கு அவர் புறப்பட்டு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு கிரண்குமார் செல்ல இருந்தார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு

இதற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அவர் பஸ்சில் புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ரெயிலில் கிரண்குமார் புறப்பட்டு வந்தார். பெங்களூரு கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் அவர் வந்த ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அங்கு, அந்த ரெயில் நிற்பதில்லை என்பதால், மெதுவாக சென்றுகொண்டிருந்த ரெயிலில் இருந்து கிரண்குமார் கீழே குதித்தார். அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்திற்குள் அவர் தவறி விழுந்தார். இதனால் அதே ரெயிலில் அடிபட்டு கிரண்குமார் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் கண்டோன்மெண்ட் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து கிரண்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்கு முன்பாக ராமமூர்த்திநகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு கிரண்குமார் செல்ல திட்டமிட்டு இருந்ததும், இதற்காக கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்து பலியானதும் தெரியவந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story