உடுமலை கிராம பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு– விற்பனை அமோகம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


உடுமலை கிராம பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு– விற்பனை அமோகம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை கிராம பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

போடிப்பட்டி,

கடந்த 1–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடுமலை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத்தடுக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வினியோகிக்கும் வணிக நிறுவனங்களிடம் பொருட்கள் பறிமுதல், அபராதம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இதுவரை உபயோகித்து வந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக இனிப்பகங்கள், உணவகங்கள், மளிகைக்கடைகள், உணவுப்பண்டங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் சாலையோர விற்பனையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் பாலித்தீன் கவர்களை பயன்படுத்த முடியாத நிலையில் பெருமளவு விற்பனை சரிந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து இனிப்பக உரிமையாளர்கள் கூறுகையில் ‘‘இனிப்பு கார வகைகள் மற்றும் ‘கேக்’ வகைகளை பேப்பர்களிலோ இலைகளிலோ கட்டிக்கொடுக்க முடியாது. அதற்கு மாற்று வழி தெரியாமல் தவித்து வருகிறோம். மேலும் சாலையோர கோலப்பொடி விற்பனையாளர்கள் கூறுகையில் ‘ கோலப்பொடிகளை வண்ணங்களை பார்த்தே தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்பொழுது தைப்பொங்கல் வரையே விற்பனை இருக்கும். எனவே அதுவரைக்கும் பாலித்தீன் கவர்களில் அடைக்கப்பட்ட வண்ண கோலப்போட்டிகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினர்.

இதேபோல் மளிகைக்கடைக்காரர்கள் கூறுகையில் ‘‘ இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களுக்கு பேப்பரில் பொருட்களை கட்டிக்கொடுப்பதற்குத் தெரியாத நிலையே உள்ளது. நீண்ட நாட்களாக பாலித்தீன் கவர்களையே பயன்படுத்தி பழகி விட்டதால் இந்த நிலை உள்ளது. எனவே கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றனர். உடுமலை நகராட்சி பகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலான வணிகர்கள் பிளாஸ்டிக் தடையை வரவேற்கும் மன நிலையிலேயே இருக்கிறார்கள். இருந்தாலும் மாற்றுப்பொருட்கள் கிடைக்காத நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்பது வணிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

அதே நேரத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் தாராளமாக உள்ளது. தடை நடவடிக்கையை அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டாததும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததும் இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story