கோவண்டியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 1 வயது சிறுவன் மரக்கிளையால் உயிர் தப்பினான்


கோவண்டியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 1 வயது சிறுவன் மரக்கிளையால் உயிர் தப்பினான்
x
தினத்தந்தி 5 Jan 2019 5:15 AM IST (Updated: 5 Jan 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

கோவண்டியில், 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 1 வயது சிறுவன் மரக்கிளையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

மும்பை, 

கோவண்டியில், 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 1 வயது சிறுவன் மரக்கிளையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

1 வயது சிறுவன்

மும்பை கோவண்டி கிழக்கு பகுதியில் பி.எஸ். தேவாசி சாலையில் கோபி கிருஷ்ணன் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 4-வது மாடியில் அஜித் பார்கடே, ஜோதி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதில் அதர்வா பார்கடே என்ற மகன் இருக்கிறான். நேற்று முன்தினம் காலை அதர்வா வீட்டில் உள்ள அறையில் விளையாடி கொண்டிருந்தான். அதர்வாவின் பாட்டி மங்கள் வெளியே துணி காயப்போட்டு கொண்டிருந்தார்.

அப்போது ஜன்னல் கதவை சிறுவனின் பாட்டி சரியாக பூட்டாமல் இருந்ததாக தெரிகிறது. அந்த ஜன்னலில் கிரில் கம்பி கிடையாது.

தவறி விழுந்தான்

இந்தநிலையில், அங்கு சிறுவன் அதர்வா தவழ்ந்து, தவழ்ந்து வந்துள்ளான். பின்னர் ஜன்னலில் தொற்றினான். இதில் அவன் ஜன்னல் வழியாக 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். எனினும் அவனிடம் அதிர்ஷ்டமும் கூடவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

நேராக தரையில் விழாமல் அவன் கட்டிடத்தையொட்டி உள்ள மரத்தின் கிளையில் விழுந்தான். இதில் மரக்கிளை வளைந்து கொடுத்ததால் அதர்வா தரையில் வேகமாக விழுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கீழே விழுந்ததில் சிறுவனுக்கு உடலில் காயம் ஏற்பட்டது. அவன் வேதனை தாங்க முடியால் வீரிட்டு அழுதான்.

தீவிர சிகிச்சை

அதன் பின்னர் தான் சிறுவன் மாடியில் இருந்து விழுந்தது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவனது அழுகை சத்தம்கேட்டு பதறி அடித்து கொண்டு குடும்பத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக அவனை மீட்டு செம்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவன் முல்லுண்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் அதர்வாவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின் அவன் அபாய கட்டத்தை தாண்டியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 4-வது மாடியில் இருந்து சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story