‘தேர்தல் கூட்டணி குறித்து 31-ந் தேதிக்குள் முடிவு எடுங்கள்’ சிவசேனாவுக்கு, அமித்ஷா கெடு


‘தேர்தல் கூட்டணி குறித்து 31-ந் தேதிக்குள் முடிவு எடுங்கள்’ சிவசேனாவுக்கு, அமித்ஷா கெடு
x
தினத்தந்தி 4 Jan 2019 11:00 PM GMT (Updated: 2019-01-05T03:54:38+05:30)

வருகிற 31-ந்தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிக்குமாறு சிவசேனாவுக்கு, பா.ஜனதா தலைவர் அமித்ஷா கெடு விதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

மும்பை, 

வருகிற 31-ந்தேதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிக்குமாறு சிவசேனாவுக்கு, பா.ஜனதா தலைவர் அமித்ஷா கெடு விதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

அமித்ஷா சந்திப்பு

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிலும், மராட்டிய மாநில அரசிலும் சிவசேனா அங்கம் வகிக்கிறது. எனினும் சிவசேனா எதிர்க்கட்சியான காங்கிரசை காட்டிலும் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. சமீபத்தில் பண்டர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். ஊழல் புகார்களில் சிக்கி உள்ள பா.ஜனதாவுடன் நாங்கள் ஏன் தேர்தல் கூட்டணி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலை இரு கட்சிகளும் இணைந்தே சந்தித்தன. இந்த தடவை நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி நீடிக்குமா?. சட்டசபை தேர்தலை போல கூட்டணி முறியுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் டெல்லியில் அக்கட்சியின் மராட்டிய மாநில எம்.பி.க்களை சந்தித்து பேசினார்.

31-ந் தேதி வரை கெடு

அப்போது, அவர் சிவசேனா கூட்டணிக்கு வரவில்லையென்றால் தனித்து போட்டியிட தயாராக இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களிடம் அறிவுறுத்தினார். மேலும் கூட்டணிக்காக சிவசேனா சொல்லுவதற்கு எல்லாம் நம்மால் ஆட முடியாது. வருகிற 31-ந்தேதிக்குள் அவர்கள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை தனித்து சந்திப்பது குறித்து நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று பா.ஜனதா எம்.பி.க்களிடம் அமித்ஷா கூறியதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் கேட்டபோது, இந்த கெடுவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அல்லது பா.ஜனதா தலைவர் அமித்ஷா எங்களுக்கு விதித்து உள்ளாரா?. அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கட்டும். அதன் பிறகு நாங்கள் பதில் அளிக்கிறோம், என்றார்.

Next Story