தாராவி விளையாட்டு வளாகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் போராட்டம் வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. அறிவிப்பு
தாராவி விளையாட்டு வளாகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் போராட்டம் நடத்தப்படும் என வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. அறிவித்து உள்ளார்.
மும்பை,
தாராவி விளையாட்டு வளாகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் போராட்டம் நடத்தப்படும் என வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. அறிவித்து உள்ளார்.
தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
மும்பை தாராவியில் ராஜீவ் காந்தி மாவட்ட விளையாட்டு வளாகம் உள்ளது. இங்கு நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இந்த மைதானத்தால் தாராவி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தாராவி விளையாட்டு வளாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. விளையாட்டு வளாகம் நஷ்டத்தில் செயல்படுவதால், அதை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருப்பதாக மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ. கண்டனம்
இந்தநிலையில் மாநில அரசின் முடிவுக்கு தாராவி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான வர்ஷா கெய்க்வாட் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மாநில விளையாட்டு துறை மந்திரி வினோத் தாவ்டேக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தாராவி விளையாட்டு வளாகம் மூலம் அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். தாராவியில் இதுதவிர வேறு விளையாட்டு வளாகங்கள் இல்லை. எனவே அதை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருப்பது தாராவி பகுதி மக்களுக்கு செய்யப்படும் அநீதி. எனவே தாராவி விளையாட்டு வளாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு திரும்ப பெறவேண்டும்.
ஒருவேளை மாநில அரசு விளையாட்டு வளாகத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் தாராவியில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு மாநில அரசே பொறுப்பு ஏற்கவேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story