அச்ரேக்கர் உடலுக்கு அரசு மரியாதை வழங்காததை கண்டித்து தெண்டுல்கர் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும்


அச்ரேக்கர் உடலுக்கு அரசு மரியாதை வழங்காததை கண்டித்து தெண்டுல்கர் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

அச்ரேக்கருக்கு அரசு மரியாதை வழங்கப்படாததை கண்டித்து சச்சின் தெண்டுல்கர் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்கவேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தினார்.

மும்பை, 

அச்ரேக்கருக்கு அரசு மரியாதை வழங்கப்படாததை கண்டித்து சச்சின் தெண்டுல்கர் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்கவேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தினார்.

சர்ச்சை

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் ஆரம்பகால கிரிக்கெட் பயிற்சியாளரான 87 வயது ரமாகாந்த் அச்ரேக்கா் வயோதிகம் காரணமாக கடந்த 2-ந் தேதி மரணம் அடைந்தார்.

அச்ரேக்கரின் இறுதி சடங்குகள் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. அப்போது அவரது உடலுக்கு தெண்டுல்கர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த ரமாகாந்த் அச்ரேக்கர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இதனால் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது.

தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக அச்ரேக்கரின் உடலுக்கு அரசு மரியாதை செய்ய முடியாமல் போய்விட்டது, இது துரதிருஷ்டமானது என்று இறுதி சடங்கில் கலந்து கொண்ட மாநில மந்திரி பிரகாஷ் மேத்தா விளக்கம் அளித்தார்.

புறக்கணிக்க வேண்டும்

இதுகுறித்து சிவசேனா கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான  சஞ்சய் ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது, “ பத்மஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை பெற்ற ரமாகாந்த் அச்ரேக்கரின் உடலுக்கு ஏன் மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படவில்லை? அரசு அவருக்கு முழு அவமதிப்பை செய்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சச்சின் தெண்டுல்கர் இனிவரும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிக்கவேண்டும்” என்றார்.

சாம்னாவில் விமர்சனம்

இதேபோல் சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கத்திலும் இதுகுறித்து கூறப்பட்டு இருந்தது.

அதில், “அரசு அச்ரேக்கருக்கு அரசு மரியாதை செலுத்தும் கடமையை முழுமையாக மறந்துவிட்டு தகவல் தொடர்பை குறைகூறுவது, மன உளைச்சலையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. அச்ரேக்கர் அரசின் திறமையின்மையை அம்பலப்படுத்தியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story