ஓடுதள பாதையில் சென்றபோது விமானத்தின் கதவு திறந்ததால் பயணிகள்அதிர்ச்சி


ஓடுதள பாதையில் சென்றபோது விமானத்தின் கதவு திறந்ததால் பயணிகள்அதிர்ச்சி
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஓடுதள பாதையில் சென்றபோது விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

செம்பட்டு, 

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானசேவை மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, சார்ஜா உள்பட பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமானநிலையத்தில் புதிதாக பலகோடி ரூபாய் செலவில் புதிய முனையம் கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமானநிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், விமானநிலைய சுற்றுவளாக சுவர் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்து சென்றது. 

இந்த விபத்தில் விமானத்தின் சக்கரங்கள் மட்டுமே சேதம் அடைந்து இருந்ததால், அதில் பயணம் செய்த 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடுதள பாதையில் வேகமாக சென்று பறக்க தயாராக இருந்த ஒரு விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பொறி கிளம்பியது. கடைசி நேரத்தில் இதனை கண்ட விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்தினார்.

 பின்னர் அந்த விமானத்தை பின்னோக்கி இயக்கி மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தினார். இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் விமானத்தின் என்ஜின் பகுதியில் தீப்பொறியினால் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். சமீபகாலமாக விமான நிலையத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடந்து வரும் சூழ்நிலையில் நேற்றும் ஒரு சம்பவம் அரங்கேறியது.

திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் துபாயில் இருந்து தினமும் காலை 4.30 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் 5.30 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்த விமானம் வழக்கம்போல் நேற்று காலை 5.30 மணிக்கு திருச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 130 பயணிகள் அமர்ந்து இருந்தனர். விமானம் ஓடுதள பாதையில் சென்றபோது, விமானத்தின் கதவு திடீரென திறந்தது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே விமானி ஓட்டி வந்தார்.

பின்னர் பயணிகள் கீழே இறக்கப்பட்டு தொழில்நுட்ப குழுவினர் வந்து கதவில் ஏற்பட்டு இருந்த கோளாறை சரி செய்தனர். இதையடுத்து 2 மணிநேரம் தாமதமாக காலை 7.30 மணிக்கு அந்த விமானம் பயணிகளுடன் திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு இன்றி ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள சம்பவம் விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story