நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர் மாவட்ட சாலை பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசு ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி அரசு பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நேற்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூரில் உள்ள நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராஜா வரவேற்றார். துணை தலைவர்கள் ராமநாயகம், ரஜினி, இணை செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்கத்தின் மாநில செயலாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்ட சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story