பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் குட்கா பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கருப்பூர்,
பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு ஒரு லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பனுக்கு தகவல் வந்தது. அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர்கள் ராஜசந்திரன் (ஓமலூர்), பாலு (ஆத்தூர்), கோவிந்தராஜ் (பனமரத்துப்பட்டி), மாரியப்பன் (பெத்தநாயக்கன்பாளையம்) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு சேலம் அருகே உள்ள கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்தனர். பின்னர் அதை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டிரைவர் பாபுலால் என்பது தெரியவந்தது.
பின்னர் லாரியை சோதனை செய்த போது பண்டல், பண்டலாக மொத்தம் 3,181 கிலோ குட்கா இருந்தது. இதைத்தொடர்ந்து கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும்.
முதல் கட்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து கோவையில் உள்ள ஒரு மொத்த வியாபாரிக்கு கொடுப்பதற்கு கடத்தி சென்றதாக அதிகாரிகள் கூறினர். இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story