கரசங்கால் அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கரசங்கால் அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2019 10:15 PM GMT (Updated: 5 Jan 2019 4:25 PM GMT)

கரசங்கால் அருகே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த 6 வழிச்சலையின் பணிகள் முடிவடைந்து வரும் நிலையில் ஒருசில பகுதிகளான படப்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் படப்பை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக இந்த பகுதி உள்ளது.

இந்த நிலையில் 6 வழிச்சாலை செல்லும் பகுதியான கரசங்கால் அருகே சாலையின் கீழே செல்லும் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து அதில் இருந்து தண்ணீர் வெளியேறியது.

இதனை சீரமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை தோண்டினார்கள். குழாயை சீரமைத்து விட்டு பள்ளத்தை மூடினர். முறையாக ஜல்லி மற்றும் தார் போட்டு சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலை பள்ளமாக இருந்தது. மேலும் அந்த பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் இல்லாததால் பள்ளம் இருப்பது தெரியாமல் அருகில் வரும்போது திடீரென பள்ளத்தில் இறங்கி விடுகின்றனர்.

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரக்கூடியவர்கள் ஒரு சில சமயங்களில் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். விபத்து ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story