ஆரணியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வெளிநாட்டு உணவுப் பொருட்களை தீவைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் பங்கேற்பு


ஆரணியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வெளிநாட்டு உணவுப் பொருட்களை தீவைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் வெளிநாட்டு உணவுப்பொருட்களை தீயிட்டு கொளுத்தி தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டார்.

ஆரணி, 

ஆன்லைன் வர்த்தகம், நூறு சதவீதம் அந்நிய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஆன்லைன் மருந்து விற்பனை, பிளாஸ்டிக் தடை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆரணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை - வேலூர் மாவட்ட அளவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் எல்.குமார், ஆரணி நகர தலைவர் வி.கே.சர்மா, மாவட்ட செயலாளர் ஏ.எச்.பக்ருதீன்அலிஅகமத், பொருளாளர் ஏ.எம்.முருகானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் எம்.எஸ்.அக்பர்பாஷா வரவேற்றார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களால் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிநாட்டு விற்பனை பொருட்களான பிஸ்கெட் கவர்கள், குர்குரே, புரு காபி போன்ற உணவுப் பொருட்களின் கவர்களை மறுசுழற்சியே செய்ய முடியாது. ஆனால் அதை தடை செய்யாமல் நாம் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கவர்களை முறையாக சேகரிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதனை மறுசுழற்சி செய்துகொள்ளலாம்.

வெளிநாட்டு உணவுப் பொருட்களின் கவர்களால் பாதிப்பு இருக்காதா, என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது குளிர்பானங்களை கீழே கொட்டியும், வெளிநாட்டு உணவுப் பொருட்களை தீயிட்டு கொளுத்தியும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் நடராஜ முதலியார், பட்டு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் குருராஜராவ், சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் அருண்குமார், குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராஜன், அய்யப்பன், கபாலி, சிவக்குமார், தேவராஜ் மற்றும் செய்யாறு அருணகிரி, களம்பூர் பாஷா உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story