மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த 2 மணி நேரமே அனுமதி உதவி கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த 2 மணி நேரமே அனுமதி உதவி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த 2 மணி நேரமே அனுமதி வழங்கப்படும் என உதவி கலெக்டர் சரவணன் கூறினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இது குறித்து ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு உதவி கலெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் முன்னிலை வகித்தார்.

இதில், தமிழர் வீர விளையாட்டு முன்னேற்ற நலச்சங்கம் நிர்வாகிகள், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

பொங்கல் தொடங்கி வருகிற மே மாதம் வரை பல்வேறு கிராமங்களில் மாடு வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் எருது விடும் திருவிழாக்களை காலம் காலமாக நடத்தி வருகிறோம். அரசிதழில் இடம் பெற, புதிய கிராமங்கள் சேர்க்க மனு அளித்தால் 15 நாட்களுக்குள் ஆணை வழங்க வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

விழாக்களில் பங்கேற்கும் மாடுகளுடன், அதன் உரிமையாளர் புகைப்படம் எடுத்து கால்நடை மருத்துவர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லும் என்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார்கள்.

தொடர்ந்து உதவி கலெக்டர் சரவணன் பேசியதாவது:-

எருது விடும் விழா நடத்த 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கூடுதல் அவகாசம் தேவைப்படின், கலெக்டருக்கு மனு அளித்து பெற்று கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் எருதுவிடும் விழா ஆகிய நிகழ்ச்சிகளை அரசிதழில் அறிவிக்கப்பட்ட கிராமங்களை தவிர வேறு எந்த கிராமங்களிலும் நடத்த கூடாது.

காவல் துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சி, மின்சாரவாரியம், மருத்துவத்துறை, ஊராட்சிகள், வட்டார போக்குவரத்துத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த பாதிப்புமின்றி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து, பரிந்துரை செய்யும் பட்சத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்படும்.

சட்டத்திற்கு புறம்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் இத்தகைய விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எருது விடும் விழாவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது. மேலும் ரொக்கப்பரிசுகள் வழங்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தாசில்தார்கள் சேகர் (கிருஷ்ணகிரி), மதுசெழியன் (பர்கூர்), கோபிநாத் (போச்சம்பள்ளி), மாரிமுத்து (ஊத்தங்கரை) மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story