நுண்ணீர் பாசனம் மேற்கொள்ள 1,945 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10.55 கோடி மானியம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


நுண்ணீர் பாசனம் மேற்கொள்ள 1,945 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10.55 கோடி மானியம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசனம் மேற்கொள்ள 1,945 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10.55 கோடி மானியம் வழங்கப்பட்டு, குறைந்த நீரில் அதிக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

மோகனூர், 

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் வட்டம் அரூர், மாடகாசம்பட்டி, காளி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள் பெற்று நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்து வரும் விவசாயிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை வேளாண் உற்பத்தியினை பெருக்கிட, 1209.46 டன் தரமான விதைகள் ரூ.3.97 கோடி மானியத்தில் வினியோகிக்கப்பட்டுள்ளன.

தோட்டக்கலைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் மூலம் நுண்ணீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் என 1,945 விவசாயிகளுக்கு ரூ.10.55 கோடி மானியம் வழங்கப்பட்டு, குறைந்த நீரில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவதுடன், உற்பத்தியும் அதிகம் பெறப்பட்டு வருகின்றது. வேளாண்மை எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ், 299 விவசாயிகளுக்கு ரூ.1.48 கோடி மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர், ரோட்ட வேட்டர் போன்ற எந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்கள் பகுதியில் நுண்ணீர் பாசனம் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிடைக்கக் கூடிய குறைந்த அளவு தண்ணீரில் அதிக பரப்பளவு வேளாண் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதே சமயத்தில் பயிருக்கு மட்டுமே தண்ணீர் நேரடியாக செலுத்துப்படுவதால், களை எடுக்கும் செலவு மிச்சப்படுவதுடன், பயிர் நன்கு வளர்ந்து மகசூல் அதிகம் கிடைப்பதை நேரில் பார்வையிட்டு, தாங்களும் நுண்ணீர் பாசனம் செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்வுகளின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மோகன்ராஜ் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடன் சென்றனர்.

Next Story