பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி: மூங்கில் கூடைகள் விற்பனை அதிகரிக்குமா? வியாபாரிகள் எதிர்பார்ப்பு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து இருப்பதால், நாமக்கல் வாரச்சந்தையில் மூங்கில் கூடைகள் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் கூடும். இங்கு காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியில் விவசாய வேலைக்கு தேவையான மூங்கில் கூடைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் இங்கு மூங்கில் கூடைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த கூடைகள் அவற்றின் அளவை பொறுத்து ரூ.100 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இங்கு ரூ.40ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கூடைகள் விற்பனையாகின. ஆனால் சமீப காலமாக மூங்கில் கூடை விற்பனை மந்தமாக இருந்து வருகிறது.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
நாமக்கல் வாரச்சந்தையில் 5-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மூங்கில் கூடைகளை விற்பனை செய்து வந்தோம். ஆனால் சமீபகாலமாக கூடைகள் விற்பனை குறைந்து வருவதால், வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது 2 பேர் மட்டுமே மூங்கில் கூடைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறோம். எங்களுக்கும் ரூ.10 ஆயிரத்துக்கு கூட விற்பனை இல்லை.
தற்போது தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உள்ளதால், இனிவரும் காலங்களில் மூங்கில் கூடைகளின் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story