பெரிய கிருஷ்ணாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


பெரிய கிருஷ்ணாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 5 Jan 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

பெரிய கிருஷ்ணாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெத்தநாயக்கன்பாளையம், 

தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்தது இயற்கையுடன் இணைந்த பாரம்பரியம் ஆகும். கடந்த காலங்களில் உணவு சமைப்பது, தண்ணீர் குடிப்பது என அனைத்திற்கும் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய நவீன யுகத்தில், தமிழர்களின் இந்த பாரம்பரிய பொருட்கள் அனைத்தும் வீடுகளின் பரண்களில் தூசிகளுக்கு இடையே காட்சிப்பொருளாக மாறி விட்டனவோ என்று எண்ண தோன்றுகிறது.

இருப்பினும் ஆண்டுக்கு ஒருமுறையாவது அந்த மண் பாண்ட சமையல் செய்வது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையில் தழைத்தோங்கி உள்ளது சற்று ஆறுதலான விஷயம். நவீன யுகத்தில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பழமைக்கு மாறும் இந்த காலக்கட்டத்தில் மண் பானையுடன் கூடிய பொங்கல் பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இதைமுன்னிட்டு காலங்காலமாக பொங்கல் பானைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது அந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின், பிரதான தொழில் மண்பாண்டங்கள் செய்வது ஆகும்.

அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டங்களை அதிகளவில் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து மண்பாண்டங்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இங்கு தயாரிக்கப்படும் பானைகள் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனைக்காக, கோவை, மதுரை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த காலங்களில் மண்பாண்டத்தில் சமையல் செய்து சாப்பிட்டால் எந்த விதமான உடல்நலக்கோளாறும் ஏற்படாது என்று கூறினார்கள். நவீன யுகத்தில் துரித உணவுகளால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு பக்க விளைவுகளை சந்திக்கும் மக்கள், மீண்டும் பழங்கால சமையலுக்கே மாறத்தொடங்கி உள்ளனர். இதன் எதிரொலியாக, சாலையோரங்களில் மண்பாண்ட சமையல் என்ற பெயரில் பல்வேறு உணவு விடுதிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதை பார்க்கும் போது, நம் வாழ்வில் ஒன்றாக இருந்த மண்பாண்டங்கள் தற்போது ஆடம்பர வாழ்வின் அங்கமாக மாறிவிட்டதோ என்று நாம் நினைத்தாலும் பழமைக்கு மவுசு அதிகம் என்று நினைக்க தோன்றுகிறது.

நாமும் ஆண்டில் ஒருமுறையாவது இந்த பொங்கல் பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபாடு நடத்தலாமே என்ற எண்ணம் நம் அனைவரிடமும் மேலோங்கி வருகிறது. ஒருபுறம் மண்பாண்டங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மவுசு அதிகரித்து வரும் நிலையில், இந்த மண் பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிலை என்னவோ? மணல் கிடைக்காமலும், அதற்கான அரசின் எந்த சலுகையும் கிடைக்காமலும் வேதனையில் உள்ளதாக ஆதங்கப்படுகின்றனர்.

இந்த பொங்கல் பண்டிகையானது, மண்பானைகள் செய்யும் தொழிலாளர்களின் வாழ்விலும் கொண்டாட்டமாக மாற வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story