வெடிகுண்டுகளுடன் கைதான 14 பேர் சிறையில் அடைப்பு முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக வழக்கு


வெடிகுண்டுகளுடன் கைதான 14 பேர் சிறையில் அடைப்பு முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக வழக்கு
x
தினத்தந்தி 6 Jan 2019 3:15 AM IST (Updated: 6 Jan 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் கைதான 14 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் கைதான 14 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டைக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி முத்துச்சாமி, அவருடைய பேரன் சுடலைமணி ஆகியோரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த இரட்டைக்கொலை தொடர்பான குற்றவாளிகள் நெல்லையை அடுத்த சத்திரம்புதுக்குளத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீசார் நெல்லை சத்திரம்புதுக்குளம் பகுதியில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு நின்று கொண்டு இருந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

14 பேர் கைது

இதுதொடர்பாக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞர் அணி செயலாளர் கண்ணபிரான் (வயது 40), எஸ்டேட் மணி (35), குமுளி ராஜ்குமார் (38), பாறைகுளத்தை சேர்ந்த கணேசன் (33), பட்டன்கல்லூரை சேர்ந்த விஜய் கதிரவன் (26), சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த அஜித் (30), அதே ஊரைச் சேர்ந்த அருண் (32), மணப்படைவீடு பகுதியைச் சேர்ந்த புதியவன் (31), மானூரை சேர்ந்த ஆறுமுகராஜா (33), நடுவக்குறிச்சியை சேர்ந்த செல்லப்பாண்டி (30), அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் (32), கங்கைகொண்டானை சேர்ந்த ஆறுமுகம் (21), கம்மாளங்குளத்தை சேர்ந்த அருண்குமார் (23), அதே ஊரை சேர்ந்த ராஜதுரை (26) ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது.

முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி

இதையடுத்து அவர்கள் மீது ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தல், முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைதான 14 பேரும் நெல்லை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மாஜிஸ்திரேட்டு மாலதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 14 பேரையும் போலீசார் அழைத்துச்சென்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story