ஈரோடு நாச்சியப்பா வீதியில் தார்சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்


ஈரோடு நாச்சியப்பா வீதியில் தார்சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:15 AM IST (Updated: 6 Jan 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு நாச்சியப்பா வீதியில் தார்சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, ஊட்டி, பழனி, வெள்ளாங்கோவில், மதுரை, கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், பன்னீர்செல்வம் பூங்கா நோக்கி செல்லும் டவுன் பஸ்களும் நாச்சியப்பா வீதி வழியாக செல்கின்றன. இதனால் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த ரோட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. குழாய்கள் பதித்த பின்னர் குழி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக நாச்சியப்பா வீதியில் குழி பறிக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த உடன் மின் கேபிள் பதிக்கும் பணி தொடங்கியது. இந்த 3 பணிகளுக்காகவும் குழிகள் பறிக்கப்பட்டதால் ரோடு குண்டும், குழியுமாக மாறியது.

எனவே சாலை அமைக்க கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின்னர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரோடு போடும் பணி தொடங்கியது. இதற்காக ஜல்லி, சிமெண்ட் கலந்த கலவை ரோட்டில் கொட்டப்பட்டது. ஆனால் நேற்று வரை தார்ரோடு போடப்படவில்லை. இதன் காரணமாக ரோட்டில் வாகனம் செல்லும் போது சிமெண்ட் துகள்கள் காற்றில் பறந்து புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் நாச்சியப்பா வீதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென திரண்டு வந்து, ரோட்டில் தடுப்பு கம்பிகளை வைத்து வாகனங்கள் செல்ல முடியாதபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தார்ரோடு போடும் பணி தொடங்கியது. இதற்காக ஜல்லி மற்றும் சிமெண்ட் கலந்த கலவை ரோட்டில் கொட்டப்பட்டது. தற்போது வரை தார் சாலை அமைக்கப்படாததால் சிமெண்ட் துகள்கள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் மாசு படுகிறது.

மேலும் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அந்த அளவிற்கு புழுதி பறக்கிறது.

அதிக அளவில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் தங்களது முகத்தை மறைத்தபடி செல்ல நேரிடுகிறது. மேலும் சிமெண்ட் துகள்கள் கண்களில் விழுவதால் கண் கலங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. மூக்கில் சிமெண்ட் துகள்கள் ஏறுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

ரோடுகளில் வாகனங்கள் செல்லும் போது அதிக அளவிலான சிமெண்ட் துகள்கள் காற்றில் பறந்து வீடுகளுக்குள் விழுகிறது. இதனால் வீட்டில் இருக்க முடியவில்லை. இந்த பகுதியில் உள்ள கடைகள் கடந்த 3 மாதங்களாகவே அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் ஏராளமான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நாச்சியப்பா வீதியில் உடனே தார்ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது காலை, மதியம், இரவு என தினமும் 3 வேளை லாரிகள் மூலம் ரோட்டில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், ‘பாதாள சாக்கடை பணிகள் இன்னும் நிறைவடையாததால் ரோடு போடும் பணி தாமதம் ஆகிறது. இந்த பணி முடிவடைந்த உடன் தார்ரோடு போடப்படும். அதுவரை தினமும் 3 வேளை லாரிகள் மூலம் ரோட்டில் தண்ணீர் தெளிக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story