அரசு பஸ்சை உடைத்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு


அரசு பஸ்சை உடைத்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:00 AM IST (Updated: 6 Jan 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அரசு பஸ்சை உடைத்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர்,

சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே மரணம் அடைந்தபோது சிவசேனா அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருப்பூரிலும் சிவசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 18.11.2012 அன்று வேதாரண்யத்தில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. இந்த பஸ் திருப்பூர் வேலன் ஓட்டல் அருகே வந்த போது, பூளவாடி சுகுமார்நகரை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 37), மகேந்திரன் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து அந்த பஸ்சின் கண்ணாடியை உடைத்தும், கல்வீசியும் பஸ்சை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன் புகார் கொடுத்தார். அதன்பேரில் மகேஷ்குமார், மகேந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை திருப்பூர் 2–வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி ஜியாவுதீன் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது பொது இடத்தில் தகராறு செய்து, ஆபாசமாக பேசியதற்காக மகேஷ்குமார், மகேந்திரன் ஆகிய இருவருக்கும் 3 மாதமும், தமிழக அரசின் பஸ்சை உடைத்து, சேதப்படுத்தியற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதில் அரசு பஸ்சை உடைக்கும் போது தடுக்க சென்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மகேந்திரனுக்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் முருகேசன் ஆஜரானார்.


Next Story