ஊட்டி, குன்னூரில் ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு


ஊட்டி, குன்னூரில் ரூ.2 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2019 11:00 PM GMT (Updated: 5 Jan 2019 7:34 PM GMT)

ஊட்டி, குன்னூரில் ரூ.2 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.2 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிகட்டு மற்றும் பேராறு பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் நடைபெற உள்ள இடம், மேலூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, பீமன் தோட்டம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.2 லட்சம் மதிப்பில் நீர் தேக்க குழி அமைக்கும் பணி, மஞ்சக்கொம்பை முதல் டிக்லண்ட்லீஸ் வரை ரூ.7.6 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சாலை பணி, கோட்டக்கால் பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61.9 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தார்ச்சாலை, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52.9 லட்சம் செலவில் மானார் முதல் ஊஞ்சலார் கொம்பை வரை நடந்து வரும் சாலை பணி, உபதலை ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மா பூங்கா, தாய் திட்டத்தின் கீழ் ரூ.12.5 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி மையம், ரூ.4.8 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடைபாதை ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நடைபெற்று வரும் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story