சிவகங்கை அருகே விளையாட சென்ற இடத்தில் கிணற்றில் விழுந்து அண்ணன், தங்கை சாவு
விளையாட சென்ற இடத்தில் கிணற்றில் விழுந்து அண்ணன்–தங்கை பரிதாபமாக இறந்த சம்பவம் சிவகங்கை அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்த கீழப்பூங்குடியை சேர்ந்தவர் செந்தில். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி செல்வி. இவர்களின் 8 வயது மகன் கார்த்திக், 6 வயது மகள் ஸ்ரீமதி. இவர்கள் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் அண்ணனும், தங்கையும் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினர். பின்னர் இருவரும் வெளியில் விளையாட சென்றனர்.
இரவு 7 மணிக்கு மேல் ஆகியும் மகனும், மகளும் வீட்டுக்கு வராததால் பெற்றோரும், உறவினர்களும் அவர்களை தேடத்தொடங்கினர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து மதகுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் கார்த்திக், ஸ்ரீமதியை தேடினர்.
இந்தநிலையில் ஊரில் உள்ள குடிநீர் ஊருணியின் நடுவில் இருந்த கிணற்றில் சிறுவன் கார்த்திக்கும், சிறுமி ஸ்ரீமதியும் பிணமாக கிடந்தனர். இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களது வீட்டில் தெரிவித்தனர்.
இதைக்கேட்டதும் செந்தில், அவருடைய மனைவி செல்வி ஆகியோர் பதறியபடி ஓடிவந்து பார்த்தனர். தங்களது மகன், மகள் கிணற்றில் பிணமாக மிதந்ததை பார்த்து அவர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகங்கை தாசில்தார் ராஜா தலைமையில் அதிகாரிகளும், சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் இருந்து அண்ணன்–தங்கை உடல்கள் மீட்கப்பட்டு, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், விளையாட சென்ற இடத்தில் கிணற்றில் சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என்றும், அவனை காப்பாற்ற முயன்று அவளுடைய தங்கை ஸ்ரீமதியும் கிணற்றுக்குள் விழுந்ததில் இருவரும் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்து அண்ணன், தங்கை பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.