100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பரிசு; முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்
2017–18–ம் ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி பரிசு வழங்கினார்.
சிவகங்கை,
மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2017–18–ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12–ம்வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதையடுத்து தகுதி பெற்ற அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சாஸ்தாசுந்தரம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தனக்குமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து கலந்து கொண்டு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
விழாவில் அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சக்திவேல், முனியாண்டி, ராஜா, ஜீவானந்தம், செந்தில்குமார், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.