ஊட்டியில் ரூ.27 கோடியில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்
ஊட்டியில் ரூ.27 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்குள்ள சாலைகள் ஏற்ற, இறக்கங்களாக காணப்படுவதோடு, வளைந்து, நெளிந்து செல்கிறது. கோடை சீசன், 2-வது சீசன், தொடர் விடுமுறை காலங்களில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் அதிகளவில் வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மலைப்பாதையில் கீழ் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும், வளைவுகளில் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது என்று சாலையோரங்களில் ஆங்காங்கே பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனை புதியதாக வரும் வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்காததாலும், சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வருவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. அதன் காரணமாக வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர், ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் திரளானோர் ஊட்டிக்கு வருகை புரிகின்றனர். சமவெளி பகுதிகளில் இருந்து குன்னூர் வழியாகவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, ஊட்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டி நொண்டிமேடு சந்திப்பு பகுதியில் இருந்து சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட் வரை 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. தற்போது பிங்கர்போஸ்ட்டில் சாலையோரத்தில் இருந்த மண் திட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதோடு, சாலையில் மழைநீர் தேங்காத வகையில் மழைநீர் கால்வாய் கட்டப்பட உள்ளது.
மழைநீர் செல்லும் சிறிய கால்வாய் மோரிகள் அமைக்கப்பட இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டால், கனரக வாகனங்கள், அரசு பஸ்கள் எவ்வித தடையின்றி செல்ல முடியும். ஊட்டியில் சாலையை அகலப்படுத்தும் போது, பெரிய பாறைகளை உடைத்து அகற்ற அனுமதி பெற வேண்டும். இதனால் அகலப்படுத்தும் பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story