மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் இஸ்ரோ வேகமாக செயல்படுகிறது; விஞ்ஞானி பேட்டி


மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் இஸ்ரோ வேகமாக செயல்படுகிறது; விஞ்ஞானி பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2019 4:45 AM IST (Updated: 6 Jan 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் இஸ்ரோ மிக வேகமாக செயல்பட்டு வருவதாக விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த அறிவியல் திறமையாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலெக்டர் வீரராகவ ராவ் கலந்துகொண்டு அறிவியலில் சிறந்த மாணவ–மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கலந்துகொண்டு பேசினார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– இஸ்ரோ அமைப்பு நம் நாட்டு மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டு வருகிறது. எந்த நாட்டுடன் போட்டி என்றில்லாமல் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பில் முன்னேற்றம் போன்றவற்றை கருத்தில் கொண்டும் தற்போது இஸ்ரோ மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வருடத்திற்கு ஒரு செயற்கைக்கோள் அனுப்பினாலே அது பெரிதாக இருந்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. தற்போது ஒரு வருடத்தில் 15 செயற்கைக்கோள்களை அனுப்பும் அளவுக்கு மிக வேகமாக இஸ்ரோ செயலாற்றி வருகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு தேவைகளுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் டிரான்ஸ்பாண்டர்களை பயன்படுத்தி வந்தோம்.

தற்போது உள்நாட்டிலேயே செயற்கைகோள்களை தயாரித்து அனுப்பி தொலைத்தொடர்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச்செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது மக்களுக்கு என்ன தேவையோ அந்த அனைத்து தொழில்நுட்பங்களையும் விரைவாக உடனுக்குடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story