பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் நாளை முதல் வழங்கப்படுகிறது


பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் நாளை முதல் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 6 Jan 2019 4:15 AM IST (Updated: 6 Jan 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்,

தமிழக முதல்- அமைச்சர் அறிவிப்பிற்கு இணங்க பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 2 அடி நீளம் உள்ள கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் ரூ.1,000 வழங்கத்தக்க பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பொதுமக்கள் சிரமமின்றி பெறுவதற்கு ஏதுவாக முதல் நாள் முழுநேர ரேஷன் கடைகளில் 100 குடும்ப அட்டைகளுக்கும், 2-ம் நாள் முதல் 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கும் சுழற்சி முறையில் வழங்கத்தக்க அளவில் உரிய ஏற்பாடுகள் ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் நாளை (திங்கட் கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரை 5 நாட்களிலும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 1.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். இதில் சுழற்சி முறையில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 12, 13-ந் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட உள்ளதால் குடும்ப அட்டைதாரரோ அல்லது குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள குடும்ப உறுப்பினரோ ரொக்கம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் வரும்போது அவரது ஆதார் அட்டையுடன் வர வேண்டும். குடும்ப அட்டை இல்லாத இனங்களில், அவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

இது தொடர்பான தகவல்களை பெறுவதற்கும், குறைகளை தெரிவிப்பதற்கும் அரியலூர் மாவட்ட பொதுமக்கள் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்ணான 04329-228151, 228131 என்ற தொலைபேசி எண்ணிலும், பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணான 9445476298 என்ற செல்போன் எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சாந்தா (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். 

Next Story