குரங்கு நீர்வீழ்ச்சிக்கு கடந்த ஆண்டு வந்த சுற்றுலா பயணிகள் மூலம் ரூ.95 லட்சம் வசூல்
கடந்த ஆண்டு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மூலம் ரூ.95 லட்சம் வசூலாகி உள்ளது.
பொள்ளாச்சி,
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்து உள்ளது, குரங்கு நீர்வீழ்ச்சி. பொள்ளாச்சியில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் வால்பாறை ரோட்டில் அமைந்து உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழை மற்றும் வால்பாறை சக்தி எஸ்டேட் பகுதியில் பெய்யும் மழை மூலம் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வருகிறது. தற்போது வனப்பகுதியில் மழை அளவு குறைந்ததால் நீர்வீழ்ச்சியில் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பொள்ளாச்சி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் வந்து குளித்து செல்கின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம், ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஒரு நபருக்கு ரூ.30, கேமராவுக்கு ரூ.80, வீடியோ கேமராவுக்கு ரூ.300, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.200 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சலுகை விலையில் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் வார நாட்களில் சோதனை சாவடியில் ரூ.10 ஆயிரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், தொடர்ந்து விடுமுறை நாட்கள் இருந்தால் ரூ.60 ஆயிரம் வரையும் வசூலாகிறது. இதற்கிடையில் சுற்றுலாவை மேம்படுத்த தொடங்கப்பட்ட யானை சவாரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குரங்கு நீர்வீழ்ச்சிக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 25 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதன்மூலம் ரூ.91 லட்சத்து 50 ஆயிரத்து 750 வசூலாகி உள்ளது. இதை தவிர புகைப்பட மற்றும் வீடியோ கேமரா மூலம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 900, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் ரூ.60 ஆயிரத்து 600 வசூலானது. 174 சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்ததில், ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
இதை தவிர அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வந்தது உள்பட பல்வேறு வகையில் மொத்தம் ரூ.95 லட்சத்து 12 ஆயிரத்து 605 வசூலானது. இதற்கிடையில் பலத்த மழையின் காரணமாக நீண்ட நாட்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் யானை சவாரியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இல்லையெனில் இந்த ஆண்டு வருவாய் ரூ.1 கோடியை தாண்டி இருக்க கூடும். கடந்த 2017-ம் ஆண்டு ரூ.56 லட்சத்து 6 ஆயிரத்து 180 வசூலாகி இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பி உள்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story