பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்


பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 8:18 PM GMT)

பாடாலூர் வழிதுணை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாடாலூர்,

ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே பூமலை சஞ்சீவிராயர் மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் வழிதுணை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கலச பூஜை, சகஸ்ர நாம அர்ச்சனை, ஹோமம், திருவாராதனம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

நேற்று அனுக்ஞைதன பூஜை, கலச பூஜை, சுப்ரபாதம் புண்ணியாகவாசம், சுதர்சன ஹோமம், கும்ப அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், குங்குமம், விபூதி உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வடைமாலை சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு நேற்று மதியம் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

Next Story