தமிழக லாரி-கார் பயங்கர மோதல் ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி மராட்டியத்தை சேர்ந்தவர்கள்


தமிழக லாரி-கார் பயங்கர மோதல் ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி மராட்டியத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 6 Jan 2019 5:00 AM IST (Updated: 6 Jan 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே தமிழக லாரியும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் மராட்டியத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெங்களூரு, 

பெலகாவி அருகே தமிழக லாரியும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் மராட்டியத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

லாரி-கார் மோதல்

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா நிப்பானி அருகே ஸ்தவநிதி பகுதியில் நேற்று மாலையில் தமிழக லாரி கோலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த சாலையில் வந்த காரும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் லாரியும், காரும் அப்பளம் போல் நொறுங்கியது.

லாரி மற்றும் காரின் பாகங்கள் உருக்குலைந்து தனித் தனியே விழுந்தன. இதனால் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து மரண ஓலம் விட்டனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக நிப்பானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நிப்பானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

6 பேர் பலி

அப்போது, காரில் பயணித்த சிறுவன் உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதையடுத்து டிரைவர், கிளீனரை மீட்ட போலீசார் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் 2 பேரும் மராட்டியத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், உயிரிழந்தவர்களின் பெயர்கள் திலாவரகான் பாபேசாகேப் ஜமாதார் (வயது 60), இவருடைய மனைவி ரியானா திலாவரா ஜமாதார் (55), இவர்களின் மகன் ஜூனேத்கான் திலாவரா ஜமாதார் (30), அயான் திலாவரா ஜமாதார் (4), அப்ரீன் ஜமாதார் (34), மோசின் திலாவரா ஜமாதார் (30) என்பதும், அவர்கள் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் முரகோடு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

பெயர் சூட்டு விழாவுக்கு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் 6 பேரும் பெலகாவியில் உள்ள உறவினர் வீட்டில் நடக்க இருந்த பெயர் சூட்டு விழாவுக்காக காரில் வந்தபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அறிந்தவுடன் பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதீர்குமார் ரெட்டி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் நிப்பானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே காரும், லாரியும் மோதிக் கொண்ட காட்சி அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story