திருச்சி இ.பி.ரோடு வழியாக இன்று முதல் பஸ்கள் இயக்கம் வழித்தடங்களை மாற்றி இயக்கினால் அனுமதி ரத்து


திருச்சி இ.பி.ரோடு வழியாக இன்று முதல் பஸ்கள் இயக்கம் வழித்தடங்களை மாற்றி இயக்கினால் அனுமதி ரத்து
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இ.பி.ரோடு வழியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படும். வழித்தடங்களை மாற்றி பஸ்களை இயக்கினால் அனுமதி ரத்து செய்யப்படும் என கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து பட்டவர்த் ரோடு, இ.பி.ரோடு, கீழரண் ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக துவாக்குடி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்குவதற்கான வழித்தடங்களை கலெக்டர் ராஜாமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து இ.பி. ரோடு வழியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டவர்த் ரோடு, கீழ புலிவார்டு ரோடு, கீழரண் ரோடு, இ.பி. மார்க்கெட் ரோடு, மீன் மார்க்கெட் வழியாக துவாக்குடி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதையொட்டி வழித்தடங் களில் தரைக்கடை, காய்கறி வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், பஸ்கள் இயக்குவதற்கு இடையூறுகள் இல்லாமல் கடையை அப்புறப்படுத்த வேண்டும். பஸ்கள் இயக்குவதை உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரி (கிழக்கு), போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து கண்காணிக்க வேண்டும்.

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவெறும்பூருக்கு இயக்கப்படும் பஸ்களும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து பெருகமணிக்கு இயக்கப்படும் பஸ்களும், மேலும் மத்திய பஸ் நிலையம் செல்லக்கூடிய பஸ்கள், துறையூரிலிருந்து உப்பிலியபுரத்திற்கு செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் எந்தெந்த வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வழித்தடங்களை மாற்றி இயக்கப்படுவதால் பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் என அனைத்துதரப்பு மக்களும் சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் வரப்பெறுகிறது.

அனுமதி பெற்ற வழித்தடங்களில் மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும். அனுமதி இல்லாத வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டால் பஸ்களின் அனுமதி நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இந்த உத்தரவினை நடைமுறைப்படுத்த தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் குமரேசன், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சேக்அய்யூப், போக்குவரத்து கழக மண்டல மேலாளர் வேலுசாமி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இ.பி. ரோடு வழியாக இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் நீண்ட காலமாக இந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ஆக்கிரமிப்பு அதிகரித்தது. இந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் இ.பி.ரோடு வழியாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது. 

Next Story