பெட்ரோல்-டீசல் மீது கூடுதல் வரி விதிப்பு: கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்வு? முதல்-மந்திரி குமாரசாமி பதில்


பெட்ரோல்-டீசல் மீது கூடுதல் வரி விதிப்பு: கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்வு? முதல்-மந்திரி குமாரசாமி பதில்
x
தினத்தந்தி 6 Jan 2019 4:00 AM IST (Updated: 6 Jan 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் மீது கூடுதல் வரி விதிப்பால் கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

பெட்ரோல்-டீசல் மீது கூடுதல் வரி விதிப்பால் கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

கூடுதல் வரி விதிப்பு

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை அரசு உயர்த்தி உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான விலை சராசரியாக 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விைல உயர்வு காரணமாக மாநிலத்தில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, முதல்-மந்திரி குமாரசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மற்ற மாநிலங்களை விட குறைவு

பெட்ரோல், டீசலின் விலை சில மாதங்களுக்கு முன்பு கடுமையாக உயர்ந்த காரணத்தால், பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை கர்நாடக அரசு குறைத்திருந்தது. சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை மிகவும் சரிவடைந்து விட்டது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு முன்பு வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது வரி அதிகரிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சராசரியாக 1 ரூபாய் 60 காசுகள் முதல் 1 ரூபாய் 80 காசுகள் மட்டுமே உயர வாய்ப்புள்ளது.

மாநில மக்களுக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்காமல் பெட்ரோலிய பொருட்களுக்கான கூடுதல் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. அரசுக்கு வருவாயை பெருக்கும் நோக்கத்தில் சிறிய அளவில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக தான் இருக்கிறது.

அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு

மாநிலத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் கடந்த 6 மாதங்களாக மந்திரி டி.சி. தம்மண்ணா கோரிக்கை விடுத்து வருகிறார். டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்கள் கடன் சுமையில் தத்தளிப்பதாகவும் கூறியுள்ளார்.

மாநில மக்கள் தொந்தரவை அனுபவிக்க கூடாது என்பதற்காக பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவிலலை. டீசல் விலை உயர்வு மற்றும் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் பஸ் கட்டணம் உயர்வு குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளை மூட தயார்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை சோதனை அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக தான் அறிவித்துள்ளேன். அதற்காக கன்னட மொழியை நான் அழிக்க நினைப்பதாக சிலர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். என் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளவர்களின் பேரக் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பது பற்றி சொல்ல தயாரா?. கன்னட மொழிக்கு பாதிப்பு ஏற்படும்படி ஒரு போதும் நடந்து கொள்ளமாட்டேன்.

தேவைப்பட்டால் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளை மூடவும் தயாராக உள்ளேன். கன்னட மொழியை பாதுகாக்கவும், வளர்ச்சிக்காகவும் தேவையான எல்லா நடவடிக்கையும் எனது தலைமையிலான அரசு எடுக்கும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story