திருப்பத்தூரில் 300 டன் செம்மரக்கட்டை ரூ.62 கோடிக்கு இ-டெண்டர் மூலம் ஏலம் வன அலுவலர் தகவல்
திருப்பத்தூரில் உள்ள சந்தன கிடங்கில் 300 டன் செம்மரக்கட்டை ரூ.62 கோடிக்கு இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது என வன அலுவலர் முருகன் தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
இது குறித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வன மாவட்ட அலுவலர் முருகன் கூறியதாவது :-
திருப்பத்தூர் வன மாவட்ட அலுவலகத்தில் சந்தன கிடங்கு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகள் சர்வதேச அளவில் ஏலம் விடப்படும்.
அதன்படி தற்போது குளோபல் இ-டெண்டர் மூலம் இந்த செம்மரக்கட்டைகளை ஏலம் விட மத்திய அரசு அறிவித்திருந்தது. 300 டன் செம்மரக் கட்டைகளை மத்திய அரசு குளோபல் இ-டெண்டர் மூலம் விற்பனைக்கு அறிவித்திருந்தது. அதனை கண்டு இந்தியா மட்டுமல்லாது சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செம்மரக்கட்டைகளை வாங்க ஆர்வம் காட்டியது.
கடந்த மாத இறுதியில் செம்மரக்கட்டையின் தரத்தை ஆய்வு செய்வதற்காக வணிகர்களுக்கு மத்திய அரசு ஒரு வாரம் அனுமதி அளித்தது.
அப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிக நிறுவனங்கள் திருப்பத்தூர் சந்தன கிடங்கில் இருந்த செம்மரக்கட்டைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஏல முறையில் செம்மரக்கட்டைகளை அவர்கள் கொள்முதல் செய்தனர். இவ்வாறு 300 டன் செம்மரக்கட்டைகள் ரூ.62கோடி விற்பனையானதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் தமிழகத்தில் குளோபல் இ-டெண்டர் மூலம் ரூ.62 கோடிக்கு விற்பனையானது இதுவே முதல் முறையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story