விஸ்வரூப கோதண்டராமர் சிலை திருவண்ணாமலையை வந்தடைந்தது மாற்றுப்பாதையில் பஸ் போக்குவரத்து
வந்தவாசியிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் செல்லும் விஸ்வரூப கோதண்டராமர் சிலை நேற்று திருவண்ணாமலையை வந்தடைந்தது. அதனை திரளானோர் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
பெங்களூரு ஈஜிபுரம் கோதண்டராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வந்தவாசி அருகில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டது. அந்த சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரி விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை தீவனூர் வழியாக செஞ்சியை வந்தடைந்தது. தொடர்ந்து பல்வேறு சிக்கல்களால் சில நாட்கள் செஞ்சியில் அந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அந்த லாரி சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கப்பளாம்பாடி வழியாக திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வேடந்தவாடியை நேற்று முன்தினம் அடைந்தது. அப்போது லாரியின் டயர்கள் வெடித்ததால், மாலை லாரியை அங்கேயே நிறுத்தி டயர்கள் மாற்றும் பணி நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் லாரி அங்கிருந்து புறப்பட்டு மங்கலம் வழியாக திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையில் கோதண்டராமர் சிலை வருவதை அறிந்த பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவண்ணாமலையில் இருந்து மங்கலம் வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. கோதண்டராமர் சிலை ஏற்றி வரும் லாரிக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த லாரி மங்கலத்தில் இருந்து நூக்காம்பாடி, கிளிப்பட்டு வழியாக திருவண்ணாமலை புறவழிச்சாலையில் உள்ள அவலூர்பேட்டை கூட்ரோட்டை வந்தடைந்தது. அந்த லாரி அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கிளிப்பட்டில் உள்ள பாலம் கோதண்டராமர் சிலையை ஏற்றி வரும் லாரியின் எடையை தாங்கும் வகையில் பாலத்தின் அடியில் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன.
இந்த லாரி திருவண்ணாமலை அவலூர்பேட்டை கூட்ரோட்டில் இருந்து ஈசான்ய மைதானம் வழியாக கிரிவலப்பாதை, காஞ்சி வழியாக செங்கம் செல்ல உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த லாரி செல்ல உகந்த மாற்று வழி வேறு ஏதேனும் உள்ளதா என்று அதிகாரிகள் நேற்று இரவு ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கோதண்டராமர் சிலையுடன் லாரி செல்லும் பாதை முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story