‘தாக்கரே’ படத்தை அரசியல் ஆதாயத்துக்காக எடுக்கவில்லை ஆதித்ய தாக்கரே கூறுகிறார்
‘தாக்கரே’ படம் அரசியல் ஆதாயத்துக்காக எடுக்கப்பட்டதாக கூறுவது நியாயமற்றது என்று ஆதித்ய தாக்கரே கூறினார்.
மும்பை,
‘தாக்கரே’ படம் அரசியல் ஆதாயத்துக்காக எடுக்கப்பட்டதாக கூறுவது நியாயமற்றது என்று ஆதித்ய தாக்கரே கூறினார்.
வாழ்க்கை வரலாறு
சிவசேனா கட்சியின் நிறுவன தலைவரான, மறைந்த பால்தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு ‘தாக்கரே’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் பால்தாக்கரே வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இந்த படத்தை எழுதி, தயாரித்துள்ளார்.
இந்த படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளது. தாக்கரே படம் சிவசேனா கட்சியின் அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் படம் குறித்து யுவசேனா தலைவரும், பால் தாக்கரேவின் பேரனுமான ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-
நியாயமற்றது
தாக்கரே தொடக்க காலத்தில் தனது பள்ளி கட்டணத்தை கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டவர். ஆனால் மாநிலத்தில் இன்று பலர் கல்வி பெறுவதை அவர் உறுதி செய்துள்ளார்.
அவர் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டவர். அவர் வாழ்க்கை வரலாற்றை வைத்து அரசியல் லாபம் தேட நினைக்கிறோம் என்று கூறுவது நியாயமற்றது.
இது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இது அரசியலைப் பற்றி மட்டுமல்ல, இது இந்தியாவின் நம்பிக்கையையும், எதிர்காலம் பற்றியும் சிந்திக்கவேண்டிய வருடம். நம்முடைய சொந்த வாழ்க்கை மற்றும் நாட்டை எப்படி முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்லலாம் என்பதை இளம் வயது பெண்களும், இளைஞர்களும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற படங்களின் ரிலீஸ் தள்ளிவைப்பு
இந்த நிலையில் ‘தாக்கரே’ படம் ரிலீஸ் ஆகும் தேதியில் வெளியாக இருந்த கங்கனா ரணாவத் நடித்த “மணிகர்னிகா” மற்றும் இம்ரான் ஆஸ்மி நடித்த “சீட் இந்தியா” ஆகிய படங்களின் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், “ அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் படம் ஒரு நல்ல நாளில் வெளியாகவேண்டும் என்றே விரும்புவார்கள். அதேபோல் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தங்கள் படம் மற்ற பெரிய படங்கள், பெரிய நட்சத்திரங்களோடு போட்டியில் சிக்கிவிடக்கூடாது என்றுதான் எண்ணுவார்கள். மராட்டியத்தில் பாலாசாகேப்பை விட மிகப்பெரிய நட்சத்திரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
Related Tags :
Next Story