பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் துறைமுக வழித்தடத்தில் சேவைகள் ரத்து


பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் துறைமுக வழித்தடத்தில் சேவைகள் ரத்து
x
தினத்தந்தி 6 Jan 2019 4:15 AM IST (Updated: 6 Jan 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பை,

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முல்லுண்டு - மாட்டுங்கா

மத்திய ரெயில்வேயின் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.31 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரெயில்கள் நாகுர், காஞ்சூர்மாா்க், வித்யாவிகார் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. பயணிகள் குர்லா, விக்ரோலி மற்றும் பாண்டுப்பில் இருந்து கல்யாண் நோக்கி செல்லும் ரெயில்களில் அங்கு செல்லலாம்.

சேவைகள் ரத்து

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே காலை முதல் மாலை வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு ரெயில் சேவை இருக்காது. காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில்கள் இயக்கப்படாது. இந்த நேரத்தில் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரி, கோரேகாவிற்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.16 மணி வரை கோரேகாவ், அந்தேரி மற்றும் பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்சேவை இருக்காது.

மேற்கு ரெயில்வேவழித்தடத்தில்...

மேற்கு ரெயில்வேயில் சாந்தாகுருஸ் - மாகிம் இடையே விரைவு வழித்தடத்தில் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் இவ்விரு ரெயில்நிலையங்கள் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த தகவல்களை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story